பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 447 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி 208 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால், 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே, முதல் டெஸ்ட் போட்டியை வென்று முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, இரண்டாது போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.


மார்ச் 12-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி சொதப்பலாக விளையாடி 109 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 


இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடிய இந்திய அணியின் மயங்க் அகர்வால் 22 ரன்களில் வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்களிலும், ஹனுமா விஹாரி 35 ரன்களிலும் சீரான இடைவேளையில் ஆட்டமிழந்தனர். முன்னாள் கேப்டன் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.






இதையடுத்து, களமிறங்கிய ரிஷப் பண்ட் கடந்த இன்னிங்ஸ் போலவே அதிரடியாகவே ஆடினர். அவர் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதேவேகத்தில், 31 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டானார். பின்னர், கடந்த இன்னிங்சில் நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.


அவருக்கு ஓரளவு ஒத்துழைப்பு அளித்த ஜடேஜா 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர், களமிறங்கிய அஸ்வின் 13 ரன்களில் அவுட்டானர். நீண்ட நேரம் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் 8வது விக்கெட்டாக எம்புல்டேனியா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 87 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் இந்திய அணி 303 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.


இதனால், 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிகாக கேப்டன் திமுத் மட்டும் தனியாக போராடினார். மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். திமுத் 109 ரன்கள் எடுத்தார். குசல் மெண்டிஸ் அரை சதம் கடந்தார். இந்திய அணி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை அஷ்வின் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனால், 208 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது.


போட்டி முடிவில் 238 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வென்றது இந்திய அணி. இந்திய மண்ணில் இந்திய அணி கடைசியாக 2012-13ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் தொடரை இழந்து தோல்வி அடைந்திருந்தது. இதற்கு பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வி என்பதையே சந்தித்தது கிடையாது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ள நிலையில், உள்நாட்டில் 15வது டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்து இந்திய அணி அசத்தி இருக்கிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண