இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி புனே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இலங்களை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான். தொடர்க்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் 2 ரன்களிலும், சுப்மன் கில் 5 ரன்களில் வெளியேறினர். இதையடுத்து, தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய திரிபாதி மீது மிகபெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அதையும் அவர் பூர்த்தி செய்யவில்லை. அவரும் தன் பங்கிற்கு 5 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
பின்னால் வந்த ஹர்திக் பாண்டியா 12 ரன்களுடனும், ஹூடா 9 ரன்களுடனும் வெளியேற, இந்திய அணி 57 ரன்களில் 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக சூர்யகுமார் யாதவும், அக்சார் பட்டேலும் இருந்தனர். அனைவரும் சூர்யகுமார் மீது நம்பிக்கை வைத்திருந்த நிலையில், அக்ஸார் தான் யார் என்று நிரூபிக்க தொடங்கினார்.
இலங்கை அணியின் பந்துவீச்சை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட, இந்திய ரசிகர்களுக்கு புது நம்பிக்கை கிடைத்தது. ஹசரங்கா வீசிய 14 வது ஓவரில் அக்சார் பட்டேல் ஹாட்ரிக் சிக்ஸர்களை ஏந்தி கெத்து காட்டினார். அதே ஓவரில் சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.
அதிரடி காட்டிய அக்சார் பட்டேல் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவும் 33 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அடுத்தடுத்து பந்துகள் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து மதுஷங்க பந்தில் ஹசரங்காவிடம் கேட்சானார்.
விக்கெட் இழப்பிற்கு இந்திய அணியின் ரன் வேகம் குறைய தொடங்கியது. 18 வது ஓவரில் மாவி இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி பறக்கவிட, இந்திய அணிக்கு 12 பந்துகளில் 33 ரன்கள் தேவையாக இருந்தது.
அந்த ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் சேர்க்க, 6 பந்துகளில் 21 ரன்கள் என்ற சூழ்நிலை உருவானது. முதல் பந்து மாவி 1 ரன்னை எடுக்க, 2வது அக்சார் பட்டேல் இரண்டு ரன்களை எடுத்தார். அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்ற அக்சார், கருணாரத்னேவிடம் கேட்சானார். அடுத்த மூன்று பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் மாவி தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார்.
இதையடுத்து, இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.