இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணியில் இருந்து விலகினார். இதையடுத்து, சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா மாற்று வீரராக களமிறங்குவார் என பிசிசிஐ இன்று காலை அறிவித்தது. 


கடந்த வாரம் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதால், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜிதேஷ் சர்மா இந்திய அணியின் ஜெர்சியை அணிய இருக்கிறார். 


இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “ பிசிசிஐ மருத்துவக் குழுவால் இன்று பிற்பகல் மும்பையில் ஸ்கேன் மற்றும் நிபுணர் கருத்துக்காக சஞ்சு சாம்சன் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக காயத்திலிருந்து மீளவும், ஓய்வுவெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார். 


சஞ்சு சாம்சன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மாவை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது” என தெரிவித்தது. 






யார் இந்த ஜிதேஷ் சர்மா ?


கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஜிதேஷ் குமார் விளையாடியபோது அவரது பெயர் வெளியே தெரிய தொடங்கியது. அவர் அன்றைய போட்டியில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அசர வைத்தார். தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ஜிதேஷ் சர்மா பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 10 இன்னிங்ஸ்களில் 234 ரன்கள் குவித்துள்ளார். 


ஜிதேஷ் உள்நாட்டு சுற்றுகளில் விதர்பா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிபடுத்தி வருகிறார். 2015-16 சையது முஷ்டாக் அலி டிராபியில், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் உள்பட 140 க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 343 ரன்களைக் குவித்து மூன்றாவது அதிக ரன் எடுத்தவர் ஆனார். 


ஐபிஎல் 2016 ஏலத்தில் விதர்பாவைச் சேர்ந்த ஜிதேஷ் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. பின்னர் 2022 ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.


இலங்கை டி20 போட்டிக்கான புதிய இந்திய அணி விவரம்:


 ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.