இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட்கோலி சதமடித்து அசத்தினார். வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்து அசத்திய பிறகு விராட்கோலி மீண்டும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்து அசத்தியுள்ளார். நடப்பாண்டில் இந்திய அணி விளையாடிய முதல் ஒருநாள் போட்டியிலே விராட்கோலி சதமடித்து அசத்தியுள்ளார். 


தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன்கில் – ரோகித்சர்மா ஜோடி 143 ரன்களில் பிரிந்தபோது களமிறங்கிய விராட்கோலி தொடக்கத்தில் நிதானமாக ஆடினார். ரோகித்சர்மா அதிரடியாக ஆட விராட்கோலி தனக்கே உரிய பாணியில் நிதானமாக ஆடினார்.




ரோகித்சர்மா ஆட்டமிழந்த பிறகு அடுத்து வந்த ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகியோருடன் கூட்டணி அமைத்து பொறுப்பாக பேட் செய்த விராட்கோலி அரைசதம் விளாசினார். அவர் 52 ரன்கள் இருந்தபோது அளித்த எளிதான கேட்ச் வாய்ப்பை இலங்கை விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் தவறவிட்டார். அதன்பயனை மிகவும் மோசமாக அவர்கள் அனுபவித்தனர்.


அதன்பின்னர், களத்தில் இலங்கை அணிக்கு எந்த வாய்ப்பும் அளிக்காத விராட்கோலி 80 பந்துகளில் ஒருநாள் போட்டியில் தனது 45வது சதத்தை பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டியில் விராட்கோலியின் சதத்தை எட்டிப்பிடிக்க விராட்கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




கடந்த இரண்டரை ஆண்டுகளாக பார்மில் இல்லாமல் தவித்து வந்த விராட்கோலி சதமடிப்பாரா? என்று கேள்விகள் எழுந்து வந்த நிலையில், கடந்தாண்டு டி20 போட்டியில் சதமடித்து ரசிகர்களின் தாகத்தை தீர்த்தார். பின்னர், ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிராக சதமடித்து அசத்தினார். அந்த போட்டிக்கு பிறகு தற்போது புத்தாண்டில் விளையாடிய முதல் போட்டியிலே விராட்கோலி சதம் விளாசியுள்ளார். விராட்கோலி அடுத்தடுத்து விளாசியுள்ள சதம் என்பது குறிப்பிடத்தக்கது. விராட்கோலி ஒட்டுமொத்தாக விளாசியுள்ள 73வது சதம் இதுவாகும்.


266 ஒருநாள் போட்டியில் ஆடியுள்ள விராட்கோலி இதுவரை 45 சதங்கள், 64 அரைசதங்கள் உள்பட 12 ஆயிரத்து 584 ரன்கள் எடுத்துள்ளார். 115 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 37 அரைசதங்களுடன் 4008 ரன்கள் எடுத்துள்ளார். 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 28 அரைசதங்களுடன் 8119 ரன்கள் எடுத்துள்ளார்.


மேலும் படிக்க: IND vs SL 1st ODI: பேட்டிங்கில் சரவெடி... சதத்தை நழுவவிட்ட ரோகித். சுப்மன்கில்..! ரசிகர்கள் சோகம்...!


மேலும் படிக்க: Rohit Sharma On T20: டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுகிறேனா? - ரோகித் சர்மா விளக்கம்