இலங்கை உடனான டி-20 தொடர்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 2-1 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி, டி-20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் கோலி போன்ற மூத்த வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். தொடரின் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடைபெற உள்ளது.


ரோகித் செய்தியாளர் சந்திப்பு:


போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பந்து வீசிய போது, காலில் அசவுகரியத்தை உணர்ந்ததன் காரணமாக, இலங்கை உடனான தொடரில் இருந்து பும்ரா விலகியதாக விளக்கமளித்தார். நாளைய போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனவும், இஷான் கிஷானுடன் விளையாட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறினார்.


டி-20யில் ஓய்வா?


டி-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா, "தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவது என்பது சாத்தியமற்றது. இந்திய அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். நானும் அந்த இடத்தில் உள்ளேன். நியூசிலாந்து அணி உடன் 3 டி-20 போட்டிகள் உள்ளன.ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். தற்போதைய சூழலில் டி-20 போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை" என ரோகித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


பிசிசிஐ போடும் திட்டம்:


விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு, தொடக்க ஆட்டக்காரரான  ரோகித் சர்மா 3 விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். அதைதொடர்ந்து, அவரது தலைமயில் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்ற இந்திய அணி தோல்வியையே சந்தித்தது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடைபெற்ற, இரண்டு டி-தொடரிலும் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டது. அதில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட பாண்ட்யா, தொடரையும் வென்று அசத்தினார்.


இதனிடையே, ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணி, ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ நிர்வாகமும் அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, ரோகித் மற்றும் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு டி-20 போட்டிகளில் வாய்ப்பு வழங்காமல், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடருக்காக பாண்ட்யா தலைமையில் இளம் இந்திய அணியை உருவாக்க, பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதன் காரணமாக டி-20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா விரைவில் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த ஃபார்மெட்டில் இருந்து விலகுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.