இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. காயம் காரணமாக ரோகித் சர்மா அணியில் இடம்பெறாததால் கே.எல்.ராகுல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சதம் கடந்த இந்திய வீரர்கள் யார் யார்?


சச்சின் டெண்டுல்கர்:




இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகமாக ஒருநாள் ரன்கள் அடித்த இந்திய வீரராவார். இவர் 1992 முதல் 2011 வரை தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடிய போட்டிகளில் 1453 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் இவர் ஒரு சதம் விளாசியுள்ளார். 


சவுரவ் கங்குலி:




இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தென்னாப்பிரிக்கா மண்ணில் இவரும் பேட்டிங்கில் அசத்தியுள்ளார். இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 1048 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் இவர் ஒரு சதத்தை அங்கு பதிவு செய்துள்ளார். 


ஷிகர் தவான்: 




இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் அசத்தினார். அந்தத் தொடரில் மட்டும் இவர் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் விளாசி 323 ரன்கள் எடுத்தார். மொத்தமாக இவர் தென்னாப்பிரிக்க மண்ணில் 18 இன்னிங்ஸில் 798 ரன்கள் அடித்துள்ளார். 


யூசஃப் பதான்:




2010ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்த போது யூசஃப் பதான் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். அப்போது தொடரின் 5ஆவது ஒருநாள் போட்டியில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டியில் 8 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் விளாசி 70 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அசத்தினார். 


விராட் கோலி:




இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக சதங்கள் அடித்த வீரராக உள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மட்டும் 3 சதங்கள் விளாசி அசத்தினார். அத்துடன் 2018ஆம் ஆண்டு தொடரில் இவர் 558 ரன்கள் விளாசினார். தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இவர் 887 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். 


இவர்கள் தவிர ரோகித் சர்மா, டபிள்யூவி ராமன் ஆகியோரும் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: காபாவில் ஆஸி.,க்கு கட்டம் கட்டிய நாள்: இந்திய அணி செய்த தரமான சம்பவம்..