தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய 40-வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
முதுகு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி காரணமாக கோலி பங்கேற்க மாட்டார் என டாஸின்போது அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, ராகுல் இந்திய அணியை இந்த போட்டியில் வழி நடத்துகிறார். மேலும், கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். போட்டியில் டாஸ் வென்ற ராகுல், பேட்டிங் தேர்வு செய்திருக்கிறார். மயங்க், புஜாரா, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், விராட் கோலி போட்டியில் பங்கேற்காதது கிரிக்கெட் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போட்டி தொடங்கும் முந்தைய நாளன்று வலைப்பயிற்சியில் பங்கேற்றிருந்த கோலி, தீவிரமாக பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “புத்தாண்டு, அதே உத்வேகம்” என்ற கேப்ஷனோடு ட்வீட் செய்திருந்தார். அதனை அடுத்து, டாஸ் போடும்போது கோலி அணியில் இல்லை என்ற செய்தி உறுதி செய்யப்பட்டது, இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது என கிரிக்கெட் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டாஸின்போது பேசிய கேப்டன் ராகுல், ”எதிர்ப்பாராதவிதமாக கோலிக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டிருப்பதால், இந்த போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். பிஸியோ மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதால், அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்தர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி பற்றி பேசி இருந்த இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “கடந்த 20 நாட்களாக விராட் கோலி அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றிருக்கிறார். அவரது பங்களிப்பு ஒப்பற்றது. அணி வீரர்களுடன் அவர் ஏற்படுத்தி இருக்கும் பந்தம் பாராட்டத்தக்கது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் திடீரென விலகி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இல்லை. கடைசியாக எப்போது காயம் அல்லது வலி காரணமாக கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினாரா என்ற கேள்வியை கேட்கின்றனர் ரசிகர்கள், மேலும், இந்திய கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓரங்கட்டப்படுகிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பாமலும் இல்லை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்