தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி போலண்ட் பார்கில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 296 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 265 ரன்கள் அடித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

 

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 63 பந்துகளில் 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 51 ரன்கள் அடித்ததன் மூலம் சில சாதனைகளை முறியடித்துள்ளார். 

 

அதாவது வெளிநாட்டு மண்ணில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். மேலும் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் 147 இன்னிங்ஸில் படைத்திருந்தார். ஆனால் விராட் கோலி வெறும் 104 இன்னிங்ஸில் அதை கடந்து அசத்தியுள்ளார். 

 

வெளிநாட்டு மண்ணில் அதிக ஒருநாள் ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்:

வீரர்கள் இன்னிங்ஸ் ரன்கள் 
விராட் கோலி   104  5108
சச்சின் டெண்டுல்கர்  147 5065
மகேந்திர சிங் தோனி   124 4520
ராகுல் டிராவிட்  110 3998
சவுரவ் கங்குலி   105 3468


 

இவை தவிர வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரையும் முந்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 

 

வெளிநாட்டு மண்ணில் அதிக ஒருநாள் ரன்கள் அடித்த சர்வதேச வீரர்கள்:

வீரர்கள்  ரன்கள் சராசரி 
குமார் சங்ககாரா  5518  43.10
விராட் கோலி       5108   58.04 
ரிக்கி பாண்டிங்  5090  45.04
சச்சின் டெண்டுல்கர் 5065  37.24 

 

அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் விராட் கோலி முன்னேறியுள்ளார். அவர் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இரண்டு பேரையும் தாண்டியுள்ளார். 

 

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்:

வீரர்கள்  போட்டிகள் ரன்கள் 
சச்சின் டெண்டுல்கர் 57  2001
விராட் கோலி   28  1338
சவுரவ் கங்குலி 29  1313
ராகுல் டிராவிட்  36  1309
முகமது அசாரூதின்  33  1109

 

இவை தவிர தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் தற்போது விராட் கோலி 6ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(2001), ரிக்கி பாண்டிங்(1879), குமார் சங்ககாரா(1789), ஸ்டீவ் வாக் (1581), சந்தர்பால்(1559) ஆகியோருக்கு பிறகு விராட் கோலி (1338) ரன்களுடன் 6ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: 32 ஆண்டுகளுக்கு முன்... தனது முதல் நேர்காணலில் சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?