T20 World Cup Prize Money: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் பரிசுத்தொகைக்காக, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் மொத்தமாக 93.80 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.


இன்று இறுதிப்போட்டி:


ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகளுடன் தொடங்கிய நிலையில், லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகளை தொடர்ந்து, இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.


பார்படாஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி, இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணியும், முதன்முறையாக ஐசிசி கோப்பையை வெல்ல தென்னாப்ரிக்கா அணியும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


98.3 கோடி ரூபாயை ஒதுக்கிய ஐசிசி:


ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பல்வேறு பிரிவுகளில் அணிகள் மற்றும் வீரர்களுக்காக பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக இந்திய மதிப்பில் 98 கோடியே 30 லட்ச ரூபாயை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஒதுக்கியுள்ளது.


வெற்றியாளருக்கான பரிசுத்தொகை எவ்வளவு?


இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 20 கோடியே 42 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.


இரண்டாவது பிடிக்கும் அணிக்கான பரிசு?


இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 10 கோடியே 67 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.


அரையிறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கான பரிசு?


அரையிறுதி வரை முன்னேறி தோல்வியை தழுவிய இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு, தலா 787,500 அமெரிக்க டாலர்கள் அதாவது  இந்திய மதிப்பில் 6 கோடியே 56 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.


இதர பரிசுத்தொகை விவரங்கள்:


ஐசிசி T20 உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகையாக 11.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 93.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறாத அணிகளுக்கு தலா 3,82,500 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3.18 கோடியும், ஒன்பதாவது முதல் 12வது வரையிலான இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா 247,500 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2.06 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.  13 முதல் 20 வரையிலான இடங்களை பிடித்த அணிகளுக்கு 225,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1.87 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். இதுபோக நடப்பு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகள் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கும்,  31,154 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 26 லட்சம் பரிசாக வழங்கப்படும்.