உலகக் கோப்பை 2023க்கு தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் தற்போது பிஸியாக தொடங்கிவிட்டது. உலகக் கோப்பை முடிந்த கையோடு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாடுகிறது. இந்த தொடர் வருகின்ற டிசம்பர் 10ம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணிக்கு யார்தான் கேப்டன்..?
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் டி20 தொடங்கும் என்பதால் அங்கையே நமக்கு மிகப்பெரிய கேள்வி ஒன்று எழுந்துள்ளது. டி20 இந்திய அணிக்கு கேப்டன் யார் என்பதுதான் கவலை? டி20 வடிவிலான இந்திய அணியின் நிலையைப் பார்க்கும்போது, ஒவ்வொரு தொடரிலும் ஒரு புதிய கேப்டனை நியமித்து வருகிறது பிசிசிஐ. விராட் கோலி கேப்டன்சி பதவியில் இருந்து விலகியபோது ரோஹித் ஷர்மாவுக்கு மூன்று வடிவங்களின் கேப்டன் பதவியை வழங்கியது பிசிசிஐ. இருப்பினும், ரோஹித் சர்மாவுக்கு பெரும்பாலான டி20 தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக செயல்பட்டார்.
உலகக் கோப்பையின்போது தென்னாப்பிரிக்கா சென்று விளையாடி டி20 தொடரை வெல்வோம் என்று பேசிய ஹர்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்கா தொடருக்காக ஒளிபரப்பாளர்கள் தயாரித்த ப்ரோமோ வீடியோ ஒளிபரப்பானது. தற்போது ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அவரால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் விளையாட முடியாது என்று தெரிகிறது. இதன் காரணமாகவே, ஆஸ்திரேலிய தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார், தற்போது தென்னாப்பிரிக்கா தொடருக்கான புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று கே.எல் ராகுல் பேசுவது போன்ற காட்சி ஒளிபரப்பட்டு வருகிறது. இதன்மூலம், ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
முற்றிலும் கேப்டன் பதவியை துறக்கிறாரா ரோஹித் சர்மா..?
வெளியான தகவலின்படி, பணிச்சுமை காரணமாக ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணியின் கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய அணியின் முழுநேர கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டு, வருகின்ற 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்பட்டு வருகிறது.
டி20 உலகக் கோப்பை வரை டி20 வடிவில் கேப்டனாக தொடர ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுகுறித்து ரோஹித்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.