இந்திய-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய சிறப்பான பந்துவீச்சை செய்தது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்க அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஒரே ஆண்டில் அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 2022ஆம் ஆண்டு தற்போது வரை ரோகித் சர்மா 16 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக ஒரே ஆண்டில் மகேந்திர சிங் தோனி அதிகபட்சமாக 15 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார். அவர் 2016ஆம் ஆண்டு இந்தச் சாதனையை செய்திருந்தார். தற்போது அந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். 

ஒரே ஆண்டில் அதிக போட்டிகளை வென்ற இந்திய கேப்டன்கள்:

ஆண்டு போட்டிகள் கேப்டன்
1998 22 ஒருநாள் முகமது அசாரூதுதின்
2016 9 டெஸ்ட்  விராட் கோலி
2022 16* டி20 ரோகித் சர்மா

இதேபோல் இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் ஒரு சாதனைப் படைத்துள்ளார். அதாவது டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். இவர் 2022ஆம் ஆண்டில் தற்போது வரை டி20 போட்டிகளில் 45 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதன்மூலம் ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக அதிக பட்சமாக 2021ஆம் ஆண்டு முகமது ரிஸ்வான் 42 சிக்சர்கள் விளாசினார். அந்த சாதனையை தற்போது சூர்யகுமார் யாதவ் உடைத்துள்ளார். 

டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள்:

வீரர்கள் ஆண்டு அடித்த சிகர்கள்
சூர்யகுமார் யாதவ் 2022 45*
முகமது ரிஸ்வான் 2021 42
மார்டின் கப்டில் 2021 41
டோனி யூரா 2022 39*

இந்தாண்டு இன்னும் டி20 உலகக் கோப்பை தொடர் உள்ளதால் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் இந்தச் சாதனைப்பட்டியலில் மேலும் முன்னேற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.