இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிவடைந்த உடனையே, இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடரிலிருந்து தொடங்கி ஒருநாள், டெஸ்ட் என அடுத்தடுத்த தொடர்கள் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை 2024ஐ மனதில் வைத்து, இந்திய அணி அடுத்து விளையாடும் ஒவ்வொரு டி20 போட்டியிலும் சிறந்த அணியை தேர்வு செய்யவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். 

2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எளிதாக வீழ்த்தியது. இப்போது, இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாட செல்லும்போது, அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளின் வரலாறு மற்றும் புள்ளிவிவரங்களை பார்த்தால், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 24 டி20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. இதில், இந்தியா 13 ஆட்டங்களில் வெற்றியும், தென்னாப்பிரிக்கா 10 ஆட்டங்களிலும் வெற்றியும் பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவடைந்துள்ளது. 

தென்னாப்பிரிக்க மண்ணில் டி20 புள்ளிவிவரங்கள்:

தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், இதுவரை அங்கு 5 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இந்த ஐந்து போட்டிகளில் இந்தியஅணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான கடைசி டி20 சர்வதேசப் போட்டி 30 அக்டோபர் 2022 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

போட்டி எண் போட்டி தேதி இடம் இந்திய நேரப்படி
1. இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி 10 டிசம்பர் (ஞாயிறு) டர்பன் இரவு 7.30
2. இந்தியா - தென்னாப்பிரிக்கா இரண்டாவது டி20 போட்டி 12 டிசம்பர் (செவ்வாய்) கேபர்ஹா இரவு 8.30
3. இந்தியா - தென்னாப்பிரிக்கா மூன்றாவது டி20 போட்டி 14 டிசம்பர் (வியாழன்) ஜோகன்னஸ்பர்க் இரவு 8.30

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பிறகு, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே டிசம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. அதன் பிறகு இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும். முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 2024 ஜனவரி 3 ஆம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பொறுத்தவரை கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணிக்கு திரும்பலாம். சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்திய அணி பந்துவீச்சிலும் பல மாற்றங்களை செய்யலாம். அதன்படி, டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரும் இடம் பெறலாம்.  ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.