சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 202 ரன்களை குவித்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணிக்கு பேட்டிங் செய்ய உள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டி:
சூர்யகுமார் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களம் காண்கிறது இந்திய அணி. அந்த வகையில் முதல் டி20 போட்டி இன்று (நவம்பர் 8) தென்னாப்பிரிகாவில் உள்ள டர்பன் மைதானத்தில் தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள்.
சதம் விளாசிய சஞ்சு சாம்சன்:
இதில் 8 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அபிஷேக் ஷர்மா 1 பவுண்டரி மட்டுமே எடுத்து 7 ரன்களில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சே பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சனுடன் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார். 27 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்களை குவித்தார். அதன்படி 8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களை குவித்திருந்தது. அதே நேரம் 9 வது ஒவரை வீச வந்த தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் பேட்ரிக் ஒரு ஓவரிலேயே வொயிட் நோபால் என ரன்களை வாரி வழங்கினார். அதன்படி 15 ஓவரை விட்டுக்கொடுத்த அவர் கடைசி பந்தில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை எடுத்தார்.
மொத்தம் 16 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 21 ரன்னில் நடையைக்கட்டினார். இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார் திலக் வர்மா. சர்வதேச டி20 போட்டியில் அறிமுக வீரரான ஆண்டில் சைம்லேன் 10 ஓவரை வீசினார். அவரது ஓவரில் கடைசி பந்தில் திலக் வர்மா சிக்ஸரை பறக்கவிட்டார். 10.3 ஓவர் முடிவில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. இதில் 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் என தன்னுடைய சதத்தை பதிவு செய்தார் சஞ்சு சாம்சன். இதனிடையே, 18 பந்துகள் களத்தில் நின்ற திலக் வர்மா 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
203 ரன்கள் இலக்கு:
அவரைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் விக்கெட்டானர். அவர் மொத்தம் 50 பந்துகள் களத்தில் நின்று 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் என மொத்தம் 107 ரன்களை குவித்தார். அதே நேரம் தன்னுடைய 10 சிக்ஸரை பதிவு செய்ததன் மூலம் டி20 யில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் விளாசிய ரோஹித் ஷர்மாவின் சாதனை முறியடித்தார். இதனிடையே ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் பேட்டிங் செய்ய வந்தனர். சீரான இடைவெளியில் அடுத்த வந்த வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.