ஐபிஎல் 2025 தொடரில் பங்கேற்பதற்கான காரணத்தை கூறி இருக்கிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஐபிஎல் 2025:
ஐபிஎல் மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் (1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாடுகள்) ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் 320 கேப்டு பிளேயர்கள், 1,224 அன்கேப் பிளேயர்கள் மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காகத் தனது பெயரை ஏலத்திற்குப் பதிவு செய்தார். 42 வயதான ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.
இந்த நிலையில் அவர் ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை ரூ.1.25 கோடிக்குப் பதிவு செய்தது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த 2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஏலத்திலும் இவர் தனது பெயரைப் பதிவு செய்திருந்த நிலையில், எந்த அணியும் இவரை எடுக்கவில்லை. இச்சூழலில், இந்த ஆண்டு இவரை எந்த அணி எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இத்தனை வயது ஆனாலும் எதற்காக ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார் எனும் கேள்வி எல்லோரிடமும் எழுந்தது. இதற்கான பதிலை அவரே சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
காரணம் என்ன?
இது குறித்து பேசிய அவர், “நான் இன்னும் விளையாட முடியும் என்று நினைக்கும் ஏதோ ஒன்று எனக்குள் நிச்சயமாக இருக்கிறது. நான் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடியது கிடையாது. அதன் அனுபவம் எப்படி இருக்கும் என்று ஒருபோதும் நான் கண்டதில்லை. பல காரணங்களுக்காக ஒரு வீரராக நான் இன்னும் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதனால் தான் ஐபிஎல் தொடருக்கு எனது பெயரைப் பதிவு செய்துள்ளேன்”என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக அவரை இந்த முறை ஐபிஎல் அணிகள் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.