ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசத்தலாக வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 


 


இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் பேருந்தில் ஓட்டலுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வழியில் கூடியிருந்த ரசிகர்கள் வெளியே இருந்து ஆரவாரம் செய்தனர். அந்த சமயத்தில் பேருந்து உள்ளே இருந்து விராட் கோலி ரசிகர்களை பார்த்து தன்னுடைய போனை காட்டியுள்ளார். 


 


அப்போது அவர் தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வீடியோ கால் பேசி வந்துள்ளார். அவர் ரசிகர்களை பார்த்து போனை காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 






இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கவுஹாத்தியில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். அத்துடன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதனைப் படைக்கும். 


 


ஏனென்றால்  தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது வரை 3 டி20 தொடர்களில் விளையாடி உள்ளது. அவற்றில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. அந்தத் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 


 


இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-தென்னாப்பிரிக்கா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில் இரு அணிகளும் தலா 2-2 என வெற்றி பெற்று இருந்தன. அப்போது 5வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்காரணமாக அந்தத் தொடரும் 2-2 என சமனில் முடிந்தது. இதன்மூலம் தற்போது வரை இந்தியாவில் நடைபெற்றுள்ள டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி இழந்ததே இல்லை. அத்துடன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா ஒரு முறை கூட கைப்பற்றாத சோகம் தொடர்ந்து வருகிறது. இந்த முறையாவது அந்த கனவை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.