இந்தியா - தென்னாப்பிரிக்கா:
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், 3 டி20 கொண்ட தொடரை விளையாடி முடித்துள்ளது. அதன்படி, 1-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்த தொடரை இந்திய அணி சமன் செய்தது. அதேபோல், அங்கு நடைபெறும் 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
முன்னதாக, நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்களை குவித்தார். அதேபோல், தொடக்க வீரர் ஹெய்ஸ்வால் 60 ரன்களை குவித்தார்.
அதேபோல், இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரையில், குல்தீப் யாதவ் சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ரவி பிஷ்னோய் புறக்கணிப்பு:
முன்னதாக, 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேவையான இந்திய வீரர்களை கண்டறிவதற்கான முயற்சியாக இந்த தொடர் விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால், மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதேநேரம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்-க்கு இந்த முறை ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கவில்லை. அதேநேரம், சர்வதேச டி 20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராகவும் இவர் தான் இருக்கிறார்.
இப்படி இருக்கையில், இவருக்கு வாய்ப்பளிக்காதது இது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் கடந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வீரரை இத்தொடரில் நீக்கிய பரிதாபம் இந்திய அணியில் மட்டுமே நிகழும் என்று கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கெளதம் கம்பீர் பேசுகையில், “ரவி பிஷ்னோய் சற்று வேகமாக வீசக்கூடியவர் என்பதால் தேர்வு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் உங்களிடம் ஒரே நேரத்தில் இடது கை ரிஸ்ட் மற்றும் வலது கை ரிஸ்ட் ஸ்பின்னர் இருக்கிறார்கள்.
இதை விட எதிரணியை அட்டாக் செய்வதற்கான சுழல் பந்து வீச்சு ஜோடி இருக்க முடியாது. குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் நீங்கள் லெக் ஸ்பின்னர்களை தான் நம்பி விக்கெட்டுகளை எடுக்க பயன்படுத்த முடியும். அதிலும் ஜோஹன்ஸ்பர்க் போன்ற மைதானத்தில் பிஷ்னோய் விளையாடாதது ஆச்சரியமாகும். என்னைக் கேட்டால் நீங்கள் தொடர் நாயகன் விருதை வெல்லக்கூடாது. ஏனெனில் அது தான் உங்களை அணியிலிருந்து நீக்குவதற்கான முதல் காரணியாக இருக்கிறது” என்று காட்டமாக பிசிசிஐ விமர்சித்துள்ளார் கெளதம் கம்பீர்.