இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தீப்தி ஷர்மா மன்கட் முறையில் அவுட் செய்ததை தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை ட்ரோல் செய்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
ஜூலான் கோஸ்வாமி ஓய்வு
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டி ஜாம்பவான் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமிக்கு கடைசி போட்டியாகும். இதோடு அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். 2002-ல் 19 வயது வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஜுலான் கோஸ்வாமி. கடந்த 20 வருடங்களில் 12 டெஸ்டுகள், 203 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (253) எடுத்தவர் ஜுலான் தான். ஆறு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்தியா வெற்றி
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணமாக மன்கட் ரன் அவுட் முறை திகழ்ந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி 118 ரன்கள் எடுப்பதற்கும் 9 விக்கெட்களை இழந்தது. கடைசி விக்கெட்டை விடாமல் சார்லோட் டீன் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென இருந்த நிலையில் நிறைய பந்துகள் கைவசம் இருந்த நிலையில் இந்தியா விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறியது. அந்த நேரத்தில் மன்கட் முறையில் தீப்தி ஷர்மாவால் சார்லோட் டீன் ஆட்டமிழந்தார்.
மன்கட் ரன் அவுட்
தீப்தி ஷர்மாவின் இந்த ரன் அவுட்டை முன்னாள் மற்றும் தற்போதைய இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பல கிரிக்கெட் ரசுகர்களும் அதனை கேலி செய்து வருகின்றனர். Indiaஇப்படி அவுட் ஆகும் முறை பொதுவாக 'மன்கட்' என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து கேப்டன் எமி ஜோன்ஸ் போட்டியிலேயே இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், அவுட் ஆன சார்லோட் டீன் மைதானத்திலேயே கண்ணீர் விட்டது அனைவரையும் உருக்கியது.
கலாய்த்த சேவாக்
இந்த போட்டி பெரிய சலசலப்பை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கிளப்பியது. சாம் பில்லிங்ஸ், கெவின் பீட்டர்சன், ஸ்டூவர்ட் ப்ராட் போன்றோர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். சிலர் ரசிகர்களுக்கும் பதில் கூறி வந்தனர். இதனை கண்ட சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீமை ஷேர் செய்தார். இங்கிலாந்தின் கொடியை தங்கிய அந்த மீம்சின் மேல் "விளையாட்டை கண்டுபிடி" என்று எழுதி இருந்தது. கீழே, "விதிமுறைகளை மறந்துவிடு", என்று எழுதி இருந்தது. அதோடு மற்றொரு புகைப்படத்தில் விதிகள் எண் 41.16.1 ஐ பதிவிட்டிருந்தார். அதில், "பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்காக ஓடத்துவங்கியதில் இருந்து பந்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் வரை எந்த நேரத்திலும் நான்-ஸ்டிரைக்கர் கோட்டிற்கு வெளியே இருந்தால், அவரை ரன் அவுட் செய்யலாம். இந்தச் சூழ்நிலையில், பந்து வீச்சாளர் பந்தை ஸ்டம்பில் அடிப்பதன்மூலமாகவோ, அல்லது வெறுமனே பந்தை வீசாமல் கையில் வைத்திருப்பதன் மூலமாகவோ அவுட் செய்யலாம்" என்று கூறப்பட்டுள்ளது. இதனை பதிவிட்ட சேவாக், "பல இங்கிலாந்து வீரர்கள் தோல்வியாளர்களாக இருப்பது நகைப்பாக உள்ளது" என்று எழுதியுள்ளார்.