இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்று இருந்தன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமமாக இருந்தது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மட்டும் 79 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய அணி 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி மீண்டும் சொதப்பியது. விக்கெட் கீப்பர் பண்ட் மட்டும் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி நிதானமாக ஆடியது. மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 111 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது. இந்நிலையில் நான்காவது நாளான இன்று ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியில் கீகன் பீட்டர்சென் சிறப்பாக விளையாடினார். அவர் 82 ரன்கள் எடுத்து ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த பவுமா மற்றும் வென் டர் சென் ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி தன்னுடைய 7ஆவது டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
1992ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 8 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அவற்றில் இந்திய அணி ஒரே முறை 2010ஆம் ஆண்டு தொடரை டிரா செய்துள்ளது. எஞ்சிய 7 முறையும் இந்திய அணி தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வோவ்.... தமிழர் உடையில் தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங் !