மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா – இந்திய அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா 3 ரன்களில் அவுட்டானார்.


அடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் – ரோசோவ் ஜோடி தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. 6 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடி காட்டியது. குறிப்பாக டி காக் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். குயின்டன் டி காக் அரைசதம் விளாசினார். தென்னாப்பிரிக்க அணி 11 ஓவர்களில் 114 ரன்களை விளாசியது.




அணியின் ஸ்கோர் 120 ரன்களை எட்டியபோது அதிரடி காட்டிய குயின்டின் டி காக் ரன் அவுட்டானார். அவர் 43 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 68 ரன்கள் விளாசினார். அதற்கு அடுத்து ரோசோவுடன் – ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து இந்திய பந்துவீச்சை வெளுத்தனர். குறிப்பாக ரோசோவ் சிக்ஸர்களாக விளாசினார். இதனால், தென்னாப்பிரிக்க ஸ்கோர் மளமளவென எகிறியது.


இந்த ஜோடியை பிரிக்க இந்திய கேப்டன் எடுத்த எல்லா முயற்சியும் வீணாகியது. சிறப்பாக ஆடிய ரோசோவ் அரைசதம் விளாசினார். அரைசதம் கடந்தும் ருத்ரதாண்டவம் ஆடிய ரோசோவால் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் ஏறியது. சிறப்பாக ஆடிய ரோசோவ் கடைசி ஓவரில் சதமடித்தார். அவர் 48 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸருடன் சதம் விளாசி அசத்தினார்.




தீபக் சாஹர் வீசிய கடைசி ஓவரில் மில்லர் அடித்த சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. அந்த ஓவரில் மில்லர் கொடுத்த கேட்ச்சை பிடித்த சிராஜ் பவுண்டரி எல்லையை மிதித்ததால் அதுவும் சிக்ஸராக மாறியது. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 227 ரன்களை விளாசியது.


இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 49 ரன்களையும், தீபக்சாஹர் 4 ஓவர்களில் 48 ரன்களையும் வாரி வழங்கினர்.