இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியை தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியை இந்தியாவும் வென்று இருந்தன. இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறியது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.


100 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 8 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் தொடர்ந்து பவுண்டரிகள் விளாசி வந்தார். இதன்காரணமாக இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. 


 






11வது ஓவரில் இஷான் கிஷன் ஃபோர்டன் பந்துவீச்சில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்து அசத்தினார். இருவரும் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர் கொண்டனர். சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 57 பந்துகளில் 8 பவுண்டரிகளின் உதவியுடன் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் இந்திய அணி  19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார். அத்துடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.


இதன்மூலம் சொந்த மண்ணில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன்பாக இந்திய அணி 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என வென்றது. அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை இந்தியா 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. 


2015 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 3-2 என்ற கணக்கில் வென்று இருந்தது. அதன்பின்னர் 2022ஆம் ஆண்டு தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இந்தத் தொடரை வென்று அசத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் காரணமாக இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. இந்தச் சூழலில் இளம் வீரர்கள் படை தொடரை வென்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.