இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஜனவரி 03 அன்று அதாவது நாளை கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்தது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மழை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 03 முதல் 07 வரை நடைபெறவுள்ள நிலையில், கடைசி இரண்டு நாட்களில் மழையால் ஆட்டம் தடைப்படும் என்று தெரிகிறது. இரண்டாவது போட்டியில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணி விரும்புகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு மழை தடையாக இருக்கும். எனவே கேப்டவுன் வானிலை டெஸ்ட் ஐந்து நாட்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்க்கலாம். 


weather.com படி , இரண்டாவது டெஸ்டின் முதல் மூன்று நாட்கள் மழையில்லாமல் சிரமம் இன்றி விளையாடலாம். முதல் மூன்று நாட்களில் அதாவது ஜனவரி 03, 04 மற்றும் 05 ஆம் தேதிகளில் 4 முதல் 6 சதவிகிதம் மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் கடைசி இரண்டு நாட்களில் அதாவது ஜனவரி 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6ம் தேதி, அதாவது போட்டியின் நான்காவது நாளில், அதிகபட்சமாக சுமார் 50 சதவீதம் மழை பெய்யலாம். அதன்பிறகு ஜனவரி 7ம் தேதி அதாவது கடைசி நாளில் மழை பெய்ய வாய்ப்பு சுமார் 20 சதவீதம் வரை குறையும். இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிடுமா இல்லையா என்பதை பொறுத்தே இந்திய அணி தொடரை சமன் செய்யுமா அல்லது தோல்வியை சந்திக்குமா என்பது தெரியவரும். 


தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை: 


இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 28 பவுண்டரிகள் உதவியுடன் 185 ரன்கள் குவித்து சிறப்பாக ஆடி தென்னாப்பிரிக்கா வீரர் டீன் எல்கர் கடந்த போட்டியில் நட்சத்திர வீரராக ஜொலித்தார். இது தவிர, பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்களுடன் 84 ரன்களும், பெடிங்ஹாம் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 56 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த போதிலும் 408 ரன்கள் எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. 


இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் நேருக்கு நேர்:


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 43 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா 18 வெற்றியும், இந்தியா 15 வெற்றியும் பெற்றுள்ளன. இருவருக்கும் இடையே மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 


இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், அவேஷ் கான்.


இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி:


டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, டெம்பா பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜென்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, நந்த்ரே பெர்கர், கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி, வியான் எம். ஸ்டப்ஸ்.