இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. கோலிக்கு பதிலாக ராகுல் இந்திய அணியை வழிநடத்த, முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.
கேப்டன் ராகுல் (50), அஷ்வின் (46) ஆகியோரைத் தவிர மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தென்னாப்ரிக்க பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை, மார்கோ ஜென்சன் 4 விக்கெட்டுகளும், ஒலிவியர், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். தென்னாப்ரிக்காவின் மிரட்டல் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்காமல் முதல் நாளிலேயே இந்திய அணி அவுட்டாகி இருப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. 202 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டிய இந்த மூவர் கூட்டணி யார்?
மார்கோ ஜென்சன் (4-31)
ஜென்சனின் பந்துவீச்சில் ராகுல், மயாங்க், பண்ட், அஷ்வின் ஆகியோர் இன்றைய போட்டியில் பெவிலியன் திரும்பினர். 21 வயதேயான இந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் தனது கிரிக்கெட் கரியரை முதலில் ஒரு பேட்டராக தொடங்கி இருக்கிறார். செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி கிரிக்கெட் வட்டாரத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். அதுவே அவரது அறிமுக டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இந்திய அணிக்காக ரன் சேர்த்த முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
டுவானி ஒலிவியர் (3-64)
ஒலிவியர் பந்துவீச்சில் புஜாரா, ரஹானே, ஷர்துல் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 29 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஒலிவியர் தென்னாப்ரிக்கா அணியின் துருப்புச்சீட்டாக விளங்கினார். புஜாரா, ரஹானே என இந்திய அணியின் டாப் ஆர்டரை காலி செய்த ஒலிவியர், அஷ்வினை அடுத்து பேட்டிங் நிற்க கூடிய ஷர்துலின் விக்கெட்டை தூக்கி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தார். கடந்த 2017-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆகியவர். கடைசியாக 2019-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு அவர் விளையாடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கி இருக்கும் அவர், முதல் இன்னிங்ஸிலேயே தனது இருப்பை உறுதி செய்திருக்கிறார்.
கசிகோ ரபாடா (3-64)
ரபாடா பந்துவிச்சில் விஹாரி, ஷமி, சிராஜ் ஆகியோர் அவுட்டாகினர். ரபாடாவுக்கு அறிமுகம் தேவையில்லை. எனினும், இன்றைய இன்னிங்ஸில் இந்திய அணி ஆல்-அவுட்டாவதை உறுதி செய்ததில் ரபாடாவின் பங்கும் இருக்கிறது. தென்னாப்ரிக்காவின் வேகப்புயல்களில் ரபாடாவும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென முத்திரை பதித்திருக்கும் ரபாடா, உலகெங்கிலும் நடைபெறும் மற்ற முக்கிய லீக் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருபவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்