Ind vs SA 2nd Test Cricket: தென்னாப்ரிக்கா உடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வென்று, தொடரை சமன் செய்ய இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.


தென்னாப்ரிக்காவில் இந்தியா சுற்றுப்பயணம்:


கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமன் அடைந்தது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தான், இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.


இரண்டாவது டெஸ்ட் போட்டி:


இந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்து, தொடரை கைப்பற்ற தென்னாப்ரிக்கா அணி ஆர்வம் காட்டுகிறது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். 


இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் நேருக்கு நேர்:


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 43 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா 18 வெற்றியும், இந்தியா 15 வெற்றியும் பெற்றுள்ளன. இருவருக்கும் இடையே மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 4 போட்டிகளில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.


பலம், பலவீனங்கள்:


முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே பெரும் காரணமாக அமைந்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் தென்னாப்ரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். அங்கு செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இந்திய வீரர்கள், இந்த போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக கேப்டன் ரோகித் மற்றும் முன்னாள் கேப்டன் கோலியின் கைகளில் தான் அணியின் வெற்றி தோல்வி உள்ளது. 


மைதானம் எப்படி? வானிலை அறிக்கை:


முதல் போட்டியை போன்று இருக்காமல் இரண்டாவது போட்டிக்கான கேப்டவுன் மைதானம், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  weather.com படி , இரண்டாவது டெஸ்டின் முதல் மூன்று நாட்கள் மழையில்லாமல் சிரமம் இன்றி விளையாடலாம். ஆனால் கடைசி இரண்டு நாட்களில் அதாவது ஜனவரி 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையை பொறுத்தே இந்திய அணி தொடரை சமன் செய்யுமா அல்லது தோல்வியை சந்திக்குமா என்பது தெரியவரும். 


இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணி:


இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா/ஆவேஷ் கான்.


தென்னாப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), ஐடன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி