IND vs SA 2nd Test: இந்திய அணி - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சேனுரான் முத்துசாமியின் சதம், ஜான்செனின் அதிரடியால் தென்னாப்பிரிக்க அணி 489 ரன்கள் எடுத்தது.
சறுக்கிய இந்திய அணி:
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் - ராகுல் பொறுப்புடன் ஆடினர். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 63 பந்துகளில் 22 ரன்களில் அவுட்டாக, சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 58 ரன்களில் அவுட்டானார். அவர் 97 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 58 ரன்கள் எடுத்தார்.
அதன் பின்னர், இந்திய அணிக்கு சறுக்கல் என்றே கூறலாம். சாய் சுதர்சன் 15 ரன்களிலும், துருவ் ஜுரல் டக் அவுட்டும் ஆக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப்பண்ட் 7 ரன்களில் அவுட்டானார். அனுபவ வீரர் ஜடேஜா 6 ரன்னிலும், ஆல்ரவுண்டர் நிதிஷ்ரெட்டி 10 ரன்களிலும் அவுட்டாக இந்தியா 122 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
போராடிய வாஷிங்டன் சுந்தர்:
அப்போது, 8வது விக்கெட்டிற்கு வாஷிங்டன் சுந்தர் - குல்தீப்யாதவ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். குறிப்பாக, குல்தீப் களத்தில் நங்கூரமிட்டார். வாஷிங்டன் சுந்தர் ஏதுவான பந்துகளில் ரன்களை எடுத்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 150 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 48 பந்துகளில் அவுட்டானார். அவர் 92 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது, இந்திய அணி 192 ரன்கள் எடுத்திருந்தது.
அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலே குல்தீப் யாதவும் அவுட்டானார். அவர் 134 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி கடைசியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது. 288 ரன்கள் இந்தியாவை விட முன்னிலை வகித்த தென்னாப்பிரிக்கா தற்போது 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது.
மோசமாக ஆடும் இந்தியா:
இந்த மைதானம் பந்துவீச்சிற்கு பெரியளவு ஒத்துழைக்காத நிலையில், இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்தது. ஜான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்மர் 3 விக்கெட்டையும், கேசவ் மகாராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி முதல் டெஸ்டிலும் தோற்ற நிலையில், 2வது டெஸ்டில் மிக மோசமாக ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர் தவிர யாருமே சிறப்பாக ஆடவில்லை. துருவ் ஜுரல், நிதிஷ்ரெட்டி தங்களது வாய்ப்பை வீணடித்தனர். இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு ஆகும்.
பேட்டிங்கில் தென்னாப்பிரிக்கா அணிக்காக 93 ரன்கள் குவித்த ஜான்சென் துருவ் ஜுரல், ரிஷப்பண்ட், ஜடேஜா, நிதிஷ் ரெட்டி ஆகிய 4 முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியதுடன் மட்டுமின்றி குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோரையும் அவுட்டாக்கினார்.
இந்திய அணியின் பேட்டிங் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் என பலவீனமான அணிகளுக்கு எதிராக மட்டுமே தொடரை வென்றுள்ளது.