இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அதாவது ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி கடந்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததால், பதிலடி கொடுக்கவேண்டும் என மிகவும் ஆக்ரோசமான விளையாட்டினை வெளிப்படுத்தினர். 


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்கா அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார். 


சிராஜ் மட்டும் இல்லாமல், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸின் முதல் ஷெஷனில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் கெய்ல் வெர்ரைன் 15 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் பெடிங்கம் 12 ரன்களும் சேர்த்தார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மொத்தம் 4 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி  முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 


அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் அதன் பின்னர் வந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணி எடுத்த 55 ரன்களை எளிதில் கடந்து ரன்கள் சேர்க்கத்தொடங்கியது.  தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் ரோகித் சர்மா நிதனமாக விளையாடினார். 50 பந்துககளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள் விளாசி 39 ரன்கள் எடுத்த நிலையில் பர்கர் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில் 55 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சிறப்பாகவும் நிதானமாகவும் விளையாடி வந்த விராட் கோலி அரைசதத்தை நோக்கி முன்னேறி வந்தார். 


ஆனால், அடுத்ததாக களம் இறங்கிய ஸ்ரேய்ஸ் ஐயர் ரன் ஏதும் இன்றி விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் கேல்.எல்.ராகுல் 8 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜடேஜா, பும்ரா, சிராஜ், கிருஷ்ணா, ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல்,  அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 46 ரன்களில்  தனது விக்கெட் இழந்து வெளியேறினார்.  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி 6 விக்கெட்டுகளை 153 ரன்களுக்கே இழந்தது. குறிப்பாக கடைசி 11 பந்துகளில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ராபாடா, இங்கிடி மற்றும் பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 


அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி பொறுமையாக விளையாடியது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்ததால், தென்னாப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும் பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 17 ஓவர்களை எதிர்கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 36 ரன்கள் பின்தங்கியுள்ளது. போட்டி தொடங்கிய முதல் நாளில் இரு அணிகளும் ஆல் அவுட் ஆனது மட்டும் இல்லாமல், இரண்டாவது இன்னிங்ஸும் தொடங்கியுள்ளது. முதல் நாளில் மட்டும் இரு அணிகளும் சேர்த்து 23 விக்கெட்டுகள் இழந்துள்ளது.