இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று  ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. 


55 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா:


அதன்படி, தென்னப்பாரிக்காவில் உள்ள கேப்டவுன்  நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அந்த அணியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மிராட்டினார்.


தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான ஐடன் மார்க்ராம் மற்றும் அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் இருவரையும் அலறவிட்டார் முகமது சிராஜ்.  8 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாப்பிரிக்கா. இதனிடையே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்திய அணி வீரர் பும்ரா வீசிய பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.  பின்னர் வந்த டோனி டி ஜோர்ஜி முகமது சிராஜ் வீசிய பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.


முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற டேவிட் பெடிங்காம் இந்த ஆட்டத்தில் நிதனமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், முகமது சிராஜ் வீசிய பந்து ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். அதேபோல், மார்கோ ஜான்சன் ரன் ஏதும் இன்றி முகமது சிராஜின் வேகப்பந்தில் தாக்குபிடிக்க முடியாமல் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்தார்.


சற்று நிதானமாக ஆடிய  Kyle Verreynne  15 ரன்களில் சிராஜ் வீசிய பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டானார். இப்படி முகமது சிராஜ் 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவ்வாறாக தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களில் சுருண்டது.


சொதப்பிய இந்திய அணி வீரர்கள்:


பின்னர் களமிறங்கிய இந்திய அணி 153 ரன்களில் சுருண்டது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். இதில் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் இன்றி நடையைக்கட்டினார். மறுபுறம் ரோகித் சர்மா நிதனமாக விளையாடினார். அதன்படி, 50 பந்துகள் களத்தில் நின்ற அவர் 39 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சுப்மன் கில் 55 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அப்போது களத்தில் நின்ற விராட் கோலி நிதானத்தை கடைபிடித்தார். 


 


ஆனால், அடுத்ததாக களம் இறங்கிய ஸ்ரேய்ஸ் அய்யர் ரன் ஏதும் இன்றி விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் கேல்.எல்.ராகுல் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜடேஜா, பும்ரா, சிராஜ், கிருஷ்ணா, ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல், விராட் கோலியும் 46 ரன்களில் விக்கெட்டானார். இவ்வாறாக இந்திய அணி 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 11 பந்துகளில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.