தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.
சுப்மன்கில் சந்தேகம்:
இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்திய கேப்டன் சுப்மன்கில் கழுத்தில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக போட்டியின் பாதியில் இருந்து வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சிலும் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை.
இந்த தசைப்பிடிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து திரும்பினார். ஆனாலும், அவரது கழுத்தில் ஏற்பட்ட பிடிப்பும், காயமும் இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.
கேப்டன் யார்?
தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் சுப்மன்கில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் 2வது டெஸ்டில் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் உடற்தகுதி பெற்றால் மட்டுமே 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார். இல்லாவிட்டால், அவர் ஆடமாட்டார்.
ஒருவேளை சுப்மன்கில் 2வது டெஸ்ட் போட்டியில் ஆடாவிட்டால் அவருக்கு பதிலாக துணை கேப்டன் ரிஷப்பண்ட் கேப்டனாக களமிறங்குவார். மேலும், அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் களத்தில் இறங்குவார் என்று கருதப்படுகிறது. ஆனால், சுப்மன்கில் ஆடிய 4வது வீரர் என்ற இடத்தில் இறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேட்டிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
சொந்த மண்ணிலே இந்திய அணி 124 ரன்களை எடுக்க முடியாமல் தோற்றது ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரிஷப்பண்ட், சுப்மன்கில், ஜடேஜா, துருவ் ஜுரல், அக்ஷர் படேல் என பல பேட்ஸ்மேன்கள் இருந்தும் பேட்டிங்கில் ஒருவர் கூட முதல் டெஸ்டில் ஜொலிக்கவில்லை.
பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் கடந்த போட்டியில் இந்திய அணி 2 இன்னிங்சிலும் சிறப்பாகவே பந்துவீசியது. ஆனாலும், பேட்டிங் பலவீனமாக இருந்த காரணத்தால் தோல்வி அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சமாளிக்குமா?
இரண்டாவது டெஸ்டிலும் இதே நிலை நீடித்தால் இந்திய அணி தோல்வியை தவிர்ப்பது சாத்தியமற்றதே ஆகும். சுப்மன்கில் இல்லாத நிலையில், இந்திய அணியின் பேட்டிங் மேலும் பலவீனம் அடைந்துள்ளது. இந்திய அணி அதை எப்படி சரி செய்து 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும்? என்பதை காணலாம்.
இந்திய அணி:
ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், சுப்மன்கில், ரிஷப் பண்ட், ஜடேஜா, துருவ் ஜுரல், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஆகாஷ் தீப் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் பங்கேற்றுள்ளனர்.