இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி அசாம் கவுஹாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
இந்திய அணி முதல் 7 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 10வது ஓவரில் 43 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா விக்கெட்டை கேசவ் மகாராஜ் எடுத்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் 24 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். முதல் போட்டியில் அரைசதம் கடந்திருந்த இவர் தொடர்ச்சியாக இந்தப் போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார்.
28 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்திருந்த கே.எல்.ராகுல் 57 ரன்களில் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் தொடக்க முதலே பவுண்டரிகள் விளாச தொடங்கினார். இதன்காரணமாக இந்திய அணி 15 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி 17வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். இதனால் ஆட்டத்தின் 18வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்து அசத்தியது. 19வது ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் யாதவ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசி 61 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் 3வது விக்கெட்டிற்கு 43 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் விராட் கோலி ஆட்டமிழாக்கமால் 49 ரன்கள் எடுத்திருந்தார். டி20 வரலாற்றில் இந்திய அணி அடித்த 4வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தென்னாப்பிரிக்க அனிக்கு 238 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிடும். மேலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் முறையாக சொந்த மண்ணில் இந்திய அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.