இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 


இதைத் தொடர்ந்து உகளமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜானமேன் மலான் 25 ரன்களில் ஷாபாஸ் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்காரணமாக முதல் 10 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது. அடுத்து வந்த ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் எய்டன் மார்க்கரம் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். 


 






சிறப்பாக விளையாடிய ஹெண்ட்ரிக்ஸ் அரைசதம் கடந்தார். அதேபோல் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய எய்டன் மார்க்கரம் அரைசதம் கடந்தார். ஹெண்ட்ரிக்ஸ் 76 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 74 ரன்கள் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளாசன் விரைவாக 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எய்டன் மார்க்கரம் 39வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் 89 பந்துகளில் 1 ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் உதவியுடன் 79 ரன்கள் எடுத்தார். 


 






இதன்காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. அப்போது களத்தில் டேவிட் மில்லர் அதிரடி காட்டி தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. கடைசி வரை டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 35* ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.