தென்னாப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், பார்ல் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதனை அடுத்து அதே பார்ல் மைதானத்தில் இன்று மதியம் இரண்டாவது ஒரு நாள் போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ராகுல், பேட்டிங் தேர்வு செய்தார். அதனை அடுத்து இந்திய பேட்டர்கள் களமிறங்கினர். சிறப்பாக தொடங்கிய இந்திய அணிக்கு, 63 ரன்கள் எடுத்திருந்தபோது ஷிகர் தவன் அவுட்டாகினார். கடைசி போட்டியில் அரை சதம் கடந்திருந்த அவர், இந்த போட்டியில் 22 ரன்களுக்கு வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய கோலி, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், டக் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக விளையாடி கொண்டிருந்த ராகுலுடன் கைக்கோர்த்த பண்ட், ரன்களை குவித்தார். அரை சதம் கடந்து ராகுலும் அவுட்டாக, பண்ட் மட்டும் களத்தில் நின்று 85 ரன்கள் சேர்த்தார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
முதல் ஒரு நாள் போட்டியில் சொதப்பியதை போல, இந்த போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். இந்திய அணிக்கு 6வது விக்கெட் சரியும்போது 239 ரன்கள் எட்டி இருந்தது. 250-ஐ கடக்கவே திணறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் தாகூர் ரன் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தாகூர் 40* எடுக்க, அஷ்வின் 25* ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 287 ரன்கள் குவித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்