இந்திய முழுவதும் கொரோனா பாதிப்பு வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. 


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் லேசான அறிகுறிகளுடன் இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்காரணமாக நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 







இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து பெரிய சாதனை படைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக பந்துவீசி அசத்தி வந்தார். கடைசியாக அவர் 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை இவர் அறிவித்தார்.


கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் டெஸ்டில் 417 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்களையும் மற்றும் டி20 போட்டிகளில் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் நான்காவது இடத்தில் உள்ளார். 


மேலும் படிக்க: 'அவர் கர்நாடக அணியை கூட வழிநடத்தியதில்லை... : கே.எல்.ராகுலை விளாசிய கவாஸ்கர் !