இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணியின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.




இந்நிலையில் தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் தற்போது தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிமாகி வருகிறது. இதன்காரணமாக அங்கு மீண்டும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. 


 






இதன்காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு இதுவரை டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை. இந்தச் சூழலில் அந்த டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்களின் நலனை கருதி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 


 






மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு 2000 பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க தென்னாப்பிரிக்க சங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனினும் அந்த டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக அங்கு இருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி ஜோகனிஸ்பெர்கிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு பிறகு ஒருநாள் தொடர் தொடங்குகிறது. 


 


இதற்கிடையே இந்திய அணி கிரிக்கெட் அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பிசிசிஐ விராட் கோலி கேப்டன்சி சர்ச்சைக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி மீது அதிக வெளிச்சம் பட்டுள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு இத்தொடரில் அவர் தன்னுடைய பேட்டிங்கின் மூலம் விடை அளிப்பார் என்று கருதப்படுகிறது. 


மேலும் படிக்க: ஆஷஸ் டெஸ்ட்: அரணாக நின்ற பட்லரை ஹிட் விக்கெட்டில் தூக்கி.. டெஸ்ட்டை வென்ற ஆஸி. அணி