கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இது பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி 230 ரன்களுக்கு சுருண்டது. 


 


அதன்பின்னர் 242 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன்காரணமாக இங்கிலாந்து அணிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நான்காவது நாளான நேற்று இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அப்போது தொடக்க முதலே இங்கிலாந்து அணி திணறியது. நான்காவது நாளின் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. 




ஐந்தாவது நாளான இன்று இங்கிலாந்து அணி சற்று நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு அரணாக இருந்த ஜோஸ் பட்லரின் விக்கெட்டை ஹிட் விக்கெட் முறையில் இவர் வீழ்த்தினார். 


 






மிகவும் பொறுப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் 207 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். எப்படியாவது இந்தப் போட்டியை டிரா செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் அவர் விளையாடினார். எனினும் அவருடைய ஹிட் விக்கெட் ஆட்டத்தை மாற்றும் வகையில் அமைந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 


 






இதன்மூலம் ஆஷஸ் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று இருந்தது. ஆஷஸ் தொடரின் அடுத்த போட்டி வரும் 26ஆம் தேதி பாக்சிங் டே மெல்பேர்னில் தொடங்குகிறது. 


மேலும் படிக்க:விடாது பயிற்சி.. தொடாது அயற்சி... தெ.ஆப்ரிக்கா மண்ணில் வரலாறு படைக்கும் முனைப்பில் இந்திய அணி