இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்து வருபவர்  சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி டி20 போட்டியில் 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்காக அதிரடியாக அரைசதம் விளாசினார்.




அசுர பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் டி20 தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். ஐ.சி.சி. இன்று டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.






இதற்கு முன்பு, இரண்டாவது இடத்தில் இருந்த பாபர் அசாம், மூன்றாவது இடத்தில் இருந்த எய்டன் மார்க்ரமை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 861 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். முதல் 10 வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவைத் தவிர வேறு யாரும் இடம்பெறவில்லை.


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நம்பிக்கை நட்சத்திரமான விராட்கோலி ஒரு இடம் முன்னேறி 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 606 புள்ளிகளுடன் உள்ளார். ரோகித் சர்மா 613 புள்ளிகளுடன் 13வது இடத்தில் உள்ளார்.




பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 737 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் டாப் 10 வரிசையில் புவனேஷ்வர்குமார் மட்டுமே உள்ளார். அவரும் ஒரு இடம் பின்தங்கி 658 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். டி20 ஆல் ரவுண்டர்கள் வரிசையில்  ஹர்திக் பாண்ட்யா 5வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெறும் டி20 போட்டியில் சிறப்பாக ஆடினால் பாபர் அசாம் மீண்டும் தரவரிசையில் முன்னேற வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க : IND vs SA T20: சொந்த மண்ணில் தொடரை வென்றதில்லை வரலாற்றை மாற்றுமா இந்தியா? தென்னாப்பிரிக்காவுடன் நாளை மோதல்..


மேலும் படிக்க : போட்டிக்கு தயாரா..? டி20 உலகக் கோப்பை வார்ம் அப் மேட்சுக்கான அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!