இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி அசத்தலாக பந்துவீசியது. குறிப்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். இதன்காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. 

107 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் கேப்டன் ரோகித் சர்மா ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் 6 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த விராட் கோலி 3 ரன்கள் எடுத்திருந்த போது நார்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

 

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் நார்கே பந்துவீச்சில் இரண்டு சிக்சர்கள் விளாசினார். அத்துடன் ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 2022ஆம் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் தற்போது வரை 710 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பாக ஒரே ஆண்டில் அதிபட்சமாக ஷிகர் தவான் 689 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 2018ஆம் ஆண்டில் இந்த சாதனையை படைத்திருந்தார். அவருடைய சாதனையை தற்போது சூர்யகுமார் யாதவ் உடைத்துள்ளார்.

ஒரே ஆண்டில் சர்வதேச டி20 அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:

வீரர்கள் ஆண்டு  ரன்கள்
சூர்யகுமார் யாதவ் 2022 710*
ஷிகர் தவான் 2018 689
விராட் கோலி 2016 641
ரோகித் சர்மா 2018 590

அவருக்கு அடுத்த இடத்தில் 2016ஆம் ஆண்டு விராட் கோலி 641 ரன்கள் எடுத்து பிடித்துள்ளார். அதற்கு அடுத்து இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா 2018ஆம் ஆண்டு 590 ரன்கள் எடுத்திருந்தார். 


மேலும் படிக்க:அரைசதம் கடந்த கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ்... தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா..