தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக கே.எல்.ராகுல் இன்று தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்குகிறார். காயம் காரணமாக இந்திய ஒருநாள் அணியின் முழுநேர கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இந்நிலையில் இதுவரை தென்னாப்பிரிக்கா-இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக முறை வென்ற அணி எது? தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் செயல்பாடுகள் என்னென்ன?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டிகள்:

தரவுகள் போட்டிகள் இந்தியா வெற்றி தெ.ஆ. வெற்றி  முடிவில்லை
மொத்தமாக 84 35 46 3
தென்னாப்பிரிக்காவில் 34 10 22 2

 

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இதுவரை 84 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் தென்னாப்பிரிக்க அணி 46 போட்டிகளிலும் இந்திய அணி 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் தென்னாப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி 34 ஒருநாள் போட்டியில் விளையாடி 10 வெற்றி மற்றும் 22 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2 போட்டிகளுக்கு முடிவு எட்டப்பட்டவில்லை.  

அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அத்துடன் தென்னாப்பிரிக்க மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தன்னுடைய முதல் ஒருநாள் தொடர் வெற்றியையும் பதிவு செய்தது. 


இந்தத் தொடரை பொறுத்தவரை டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. ஆகவே ஒருநாள் தொடரை வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அனுபவ வீரர் ரோகித் சர்மா அணியில் இல்லாத போதும் தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு வந்துள்ளார். இதனால் தொடக்கத்தில் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டுகிறது. கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் இவர் 1 சதம் மற்றும் 2 அரைசதம் விளாசி 326 ரன்கள் எடுத்தார்.எனவே இந்தமுறையும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று கருதப்படுகிறது. 

அதேபோல் இந்திய ஒருநாள் அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தத் தொடரில் களமிறங்க உள்ளார். டெஸ்ட் தொடரில் அவர் சரியாக விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹர்திக் பாண்ட்யா இல்லாத காரணத்தால் 6ஆவது பந்துவீச்சாளராக வெங்கடேஷ் ஐயர் களமிறக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் இருந்த சிறப்பான ஆட்டத்தை அவர் இந்தத் தொடரில் வெளிப்படுத்தி அசத்துவார் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர். தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் டிகாக், மில்லர் உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: சச்சின் டூ கோலி- தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் போட்டியில் சதம் கடந்த வீரர்கள் !