இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் துபாயில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனால் இந்தத் தொடரில் விராட் கோலியின் செயல்பாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பாக பல்வேறு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் ஷதாப் கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “இந்திய அணியின் வீரர் விராட் கோலி ஒரு தலைசிறந்த வீரர். அவருடைய ஆட்டத்தில் தற்போதும் எந்தவித மாற்றமும் இல்லை. ஆகவே இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் சதம் கடப்பார் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் எங்களுக்கு எதிரான போட்டியில் அவர் சதம் அடிக்க கூடாது.


 



ஷதாப் கான் (படம்: ட்விட்டர்)


இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது எப்போதும் மிகவும் முக்கியமான போட்டிகளில் ஒன்று. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தியது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. எனினும் தற்போது இது ஒரு புதிய போட்டி. இதில் இரு அணிகளும் வெற்றி பெற விளையாடும். நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் ” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக நேற்று இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எப்போதும் நாங்கள் உற்று நோக்கி பார்த்து இருப்போம். ஏன்னெறால் இந்த இரண்டு அணிகளும் இதுபோன்ற தொடர் அல்லாமல் தனியாக வெளியே விளையாடுவதில்லை. ஆகவே இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இதற்கு முன்பாக என்ன நடந்திருந்தாலும் போட்டியின் போது எல்லாம் புதிதாக தான் தொடங்கும். இரண்டு அணிகளும் போட்டியை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கும்.


 






நாங்கள் அனைவரும் விராட் கோலி பழைய ஃபார்மிற்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகிறோம். அதேசமயம் நாங்கள் அவருடைய ஃபார்ம் குறித்து வருந்த தேவையில்லை. விராட் கோலியின் மனநிலை இப்போதும் மாறவில்லை. அவருடைய எண்ணம் தற்போது இந்தியாவிற்காக போட்டிகளை வென்று தருவதே என்று உள்ளது. அவர் எப்போதும் வெளியே இருப்பவர்களின் கருத்துகளை கேட்டு விளையாட மாட்டார். 


அவரைபோன்ற ஒரு உலக தரம் வாயந்த வீரருக்கு இது போன்ற நெருக்கடி புதிதல்ல. அவர் தற்போது சிறிய ஓய்விற்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவருடைய ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்து வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.