ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி(35),ஜடேஜா(35)மற்றும் ஹர்திக் பாண்ட்யா(33*) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலும் அசத்தினார். பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்தினார். அதன்பின்னர் பேட்டிங் போது 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இது தொடர்பாக ஹர்திப் பாண்ட்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில்,“நீங்கள் சந்தித்த பின்னடைவைவிட அதில் இருந்து மீண்டு திரும்பி வருவது மிகவும் சிறந்த விஷயங்களில் ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இதே மைதானத்தில் காயம் ஏற்பட்டு தூக்கி செல்லப்பட்ட படத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன் நேற்றைய போட்டியில் அவர் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற படத்தையும் பதிவிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 4.5 ஓவர்கள் வீசிய போது இவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா சில காலங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார். அந்த விமர்சனங்களுக்கு 2022 ஐபிஎல் தொடர் முதல் களத்தில் ஆட்டம் மூலம் பதிலளித்து வருகிறார்.
பழைய ட்விட்டர் பதிவு:
ஹர்திக் பாண்ட்யா இங்கிலாந்து தொடருக்கு பின்பு நேற்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு நாளும் நான் ஃபிட்டாக ஆக வேண்டும் என்று எண்ணினேன். அத்துடன் என்னுடைய நாட்டிற்காக திரும்ப விளையாட வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 2019ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் மீண்டு வருவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பின்னர் அவர் 2021ஆம் ஆண்டு மீண்டும் பயிற்சியை தொடங்கியதும் இடம்பெற்றுள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார். முதல் தொடரிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதன்பின்னர் அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார். அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றார். அதன்பின்னர் இங்கிலாந்து தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியிருந்தார்.