Ind Vs Pak Worldcup: அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானை நோக்கி, இந்திய ரசிகர்கள் ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டுள்ளனர்.


இந்தியா - பாகிஸ்தான் மோதல்:


இந்தியா - பாகிஸ்தான் என்றாலே எதிரிகள் தான் என்று இருநாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக நாடுகளும் கருதுகின்றன. இதனை பிரதிபலிக்கும் விதமாக தான் இருநாடுகள் இடையேயான விளையாட்டுப் போட்டிகளிலும் அனல் பறக்கும். குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு என உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. பகைமை என்ற காரணத்தை தாண்டி, இரு அணி வீரர்களும் வெற்றிக்காக முழு மூச்சுடன் இறுதி வரை போராடுவார்கள். இதனால், போட்டி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் தற்போதைய நிலை என்பது மொத்தமாகவே மாறிவிட்டது என்பதே உண்மை.


கல்லா கட்டிய மதுபான விடுதிகள்:


உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி ரசிகர்களால் நிரம்பியிருந்த நரேந்திர மோடி மைதானம், நீலக்கடலை போன்று காட்சியளித்தது. இந்த போட்டியை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகமதாபாத்தில் குவிந்தனர். இதனால் அங்குள்ள ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தன. அதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுபான விடுதிகளிலும் போட்டி ஒளிபரப்பப்பட, அங்கும் ஏராளமானோர் குவிந்தனர். 


விளம்பர வருமானம்:


தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் போட்டிகளின்போது விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ய, ஒவ்வொரு 10 நொடிக்கும் 11 முதல் 13 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தியா  - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான கணக்கே வேறு. போட்டி என்பதை தாண்டி, இதை ஏதோ போர் என்பது போல தொலைக்காட்சி நிறுவனங்கள் விளம்பரப்படுத்துகின்றன. ரசிகர்களின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை, வன்மமாக மெருகேற்றி தனக்கான வருமானமாக  அந்நிறுவனங்கள் மாற்றுகின்றன. இதன் விளைவாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது, ஒவ்வொரு 10 நொடி விளம்பரத்திற்கும் 35 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 






மதமும் அரசியலும்:


இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை கொண்டு ஒருபுறம் தொலைக்காட்சி போன்ற பெரும் நிறுவனங்கள் வருவாயை பெருக்கி வருகின்றன. மறுபுறமும் இந்த கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் அவரை நோக்கி ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டுள்ளனர். போட்டி நடைபெறும் போது ”ஜெய் ஸ்ரீராம்” என முழங்கும் பாடல்களும் மைதானத்தில் ஒலிக்கப்பட்டுள்ளன. அதோடு, இந்திய அணி ஏற்கனவே இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், பிரதமர் மோடி வாழ்த்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதும், பெருமகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதனிடையே, வழக்கமாக உலகக் கோப்பை முதல் போட்டியின் போது தொடக்க விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை 11 லீக் போட்டிகள் முடியும் வரை காத்திருந்து இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 


யாருக்கு லாபம்?


சர்வதேச போட்டி நடைபெறும் மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை போற்றும் பாடல் ஒலிக்கப்படுவது அவசியமா? மற்ற போட்டிகளில் பெற்ற வெற்றிக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு கொடுப்பதன் மூலம் பிரதமர் மோடி உணர்த்த வருவது என்ன? பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டிய காரணம் என்ன? ஒரு இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த வீரரை நோக்கி ”ஜெய் ஸ்ரீராம்” என முழங்குவதன் மூலம், என்ன மாதிரியான சகிப்புத் தனமையை இவர்கள் வெளிப்படுத்துகின்றனர்? என எண்ண தோன்றுகிறது. ஆனால், இந்த அனைத்து புள்ளிகளையும் ஒன்றிணைத்து பார்த்தால் இது அனைத்துமே ஒரு விதமான வெறுப்பு அரசியல் என்பதை மட்டும் நம்மால் துல்லியமாக உணர முடியும். அதன் மூலம் வாக்கு அரசியலை ஒரு தரப்பினர் முன்னெடுப்பதையும் கண்கூடாக காண முடியும்.