ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித்சர்மா அதிரடியான தொடக்கத்தை அளித்தார்.
கடந்த போட்டியில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த நசீம்ஷா வீசிய முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்ஸர் விளாசி அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த கே.எல்.ராகுலும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இதனால், இந்திய அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் விளாசியது. ரோகித்சர்மா – கே.எல்.ராகுலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பாபர் அசாம் 5வது ஓவரிலே சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாசை அழைத்தார். ஆனால், அந்த ஓவரில் கே.எல்.ராகுல் பவுண்டரி அடித்து 4.2 ஓவர்களில் இந்தியா 50 ரன்களை குவித்தது.
பவர்ப்ளேவில் அதிரடி காட்டிய ரோகித்சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ரன்கள் விளாசிய நிலையில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தபோது ஹரீஷ் ராஃப் பந்தில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 62 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்காக அதிரடியைத் தொடர முயற்சித்த கே.எல்.ராகுல் 28 ரன்களில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்ட கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, விராட்கோலியுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.
ஹாங்காங் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியிலும் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். ஆனால், அவர் அதிரடி தொடங்கும் முன்னரே அவர் ஆட்டமிழந்தார். முகமது நவாஸ் சுழலில் 2 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இந்தியா 10 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப்பண்ட் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.
அதிரடியாக ஆட்டத்தை தொடங்க நினைத்த நிலையில், ரிஷப்பண்ட் ஷதாப்கான் பந்தில் அவுட்டானார். அவர் 12 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து, விராட்கோலி – ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்தது.
இதனால், கடைசி ஓவர்களில் இந்திய அணி அதிரடியாக ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், இந்திய வீரர்கள் துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இந்திய அணி 17.1 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்காக பொறுப்புடன் ஆடிய விராட்கோலி 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிய தீபக்ஹூடா சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இந்திய அணிக்காக தொடக்கம் முதல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட்கோலி கடைசி ஓவரில் ரன் அவுட்டானார். அவர் 44 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி இரண்டு பந்துகளில் ரவி பிஷ்னோய் பவுண்டரி அடித்ததால் இந்திய அணி 181 ரன்களை விளாசியது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷதாப்கான் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.