வங்காளதேச அணியின் முக்கிய வீரராக வலம் வருபவர் முஸ்பிகுர் ரஹீம். அந்த அணியின் விக்கெட் கீப்பரான ரஹீமிற்கு 35 வயதாகிறது. வங்கதேச அணியை பல முறை நெருக்கடியான சூழலில் இருந்து வெற்றி பெற வைத்த ரஹீம், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.






டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தும் நோக்கத்தில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரஹீம் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு வங்காளதேச அணிக்கும், வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






2005ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ரஹீம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். வங்காளதேச அணிக்காக டி20 உலககோப்பை, ஒருநாள் உலககோப்பைகளில் ஆடிய பெருமைக்கு சொந்தக்காரர். நீண்ட அனுபவமுள்ள ரஹீம் இதுவரை 102 டி20 போட்டிகளில் ஆடி 1500 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 6 அரைசதங்கள் அடங்கும்.  அதிகபட்சமாக 72 ரன்களை விளாசியுள்ளார்.




இதுமட்டுமின்றி 82 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 25 அரைசதங்களை விளாசியுள்ளார். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8 சதங்கள், 42 அரைசதங்களை விளாசியுள்ளார்.   


தற்போது நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி குரூப் பி பிரிவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது வங்கதேச ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலககோப்பைத் தொடருக்கு ஒவ்வொரு அணிகளும் தயாராகி வரும் சூழலில், ரஹீம் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது வங்காளதேச அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : Asia Cup 2022: ஆசிய கோப்பை வரலாற்றில் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த ஆஃப்கானிஸ்தான் வீரர் யார் தெரியுமா?


மேலும் படிக்க : தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ