ஆசிய கோப்பைத் தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு இந்தியா 267 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் இந்த நல்ல இலக்கிற்கு காரணம் இஷான் கிஷான் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி மட்டுமே காரணம் ஆகும்.
இஷான் கிஷன் - ஹர்திக் பாண்ட்யா:
முக்கிய வீரர்களான ரோகித், விராட்கோலி, சுப்மன்கில் ஏமாற்ற நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்குள் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களில் அவுட்டாக ஷாகின் ஷா அப்ரீடி, நசீம்ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் பவுலிங்கை மிரட்டிக் கொண்டிருந்தனர். 15வது ஓவரில் இஷான் கிஷன் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர்.
இந்திய அணியை 150 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என்று கணக்குப் போட்ட பாகிஸ்தான் அணியின் கனவை இருவரும் சிதைத்துவிட்டனர் என்றே கூறலாம். பார்ட்னர்ஷிப் கட்டாயம் தேவை என்ற சூழலில், ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் ஓரிரு ரன்களாக சேர்த்து முதலில் அணிக்கு ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
மிரட்டிய பார்ட்னர்ஷிப்
பின்னர், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்கோரையும் ஏற வைத்தனர். மிகவும் இளம் வீரரான இஷான்கிஷான் பொறுப்புடனும், அதேசமயம் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக ஆடியும் ரன்களை துரிதமாக சேர்த்தார். அவருக்கு துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மிக அற்புதமாக ஒத்துழைப்பு அளித்தார்.
பாகிஸ்தானின் பீல்டிங் பிழைகளும் இவர்களுக்கு சாதகமாக மாற, இஷான்கிஷான் அரைசதம் விளாசினார். ஐ.பி.எல்.க்கு பிறகு அவர் ஆடிய 4 போட்டிகளிலும் அவர் அரைசதம் விளாசியுள்ளார். இஷான்கிஷானிடம் யாரும் இப்படியொரு பொறுப்பான இன்னிங்சை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. ஆனால், அவரது பேட்டிங்கை கண்டு பாகிஸ்தான் வீரர்கள் பயந்துவிட்டனர் என்பதே உண்மை.
வலுவான இலக்கு
ஆட்டத்தை முழுமையாக இந்தியா கட்டுப்பாட்டிற்குள் இந்த ஜோடி கொண்டு வந்த நேரத்தில் 82 ரன்களில் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். அரைசதத்திற்கு பிறகு அதிரடிக்கு மாறிய சமயத்தில் இஷான்கிஷன் அவுட்டானார். 38வது ஓவரில் அவுட்டான இஷான்கிஷான் இன்னும் சில ஓவர்கள் நீடித்து நின்றிருந்தால் நிச்சயம் இந்திய அணி 300 ரன்களை கடந்திருக்கும் என்றே சொல்லலாம்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பினார் என்று விமர்சிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, வெஸ்ட் இண்டீசைவிட மிகவும் தரமான பவுலிங் வைத்துள்ள பாகிஸ்தான் அணிக்கு தண்ணி காட்டினார் என்றே சொல்ல வேண்டும். கேப்டனாக ஆடிய அனுபவம் கொண்ட ஹர்திக் பாண்ட்யா, இந்த போட்டியில் கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார் என்பதே உண்மை.
சிறந்த ஸ்கோர்
பவுண்டரிகளையும், ஓரிரு ரன்களையும் துரிதமாக எடுத்த ஹர்திக் பாண்ட்யா இஷான்கிஷனுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்ததுடன் 90 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 87 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா – இஷான்கிஷன் ஜோடி 132 ரன்களை குவித்தனர். இதுவே, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய ஜோடி ஒன்று 5வது விக்கெட்டுக்கு குவித்த அதிகபட்ச ரன் ஆகும்.
சீனியர் வீரர்கள் ஏமாற்றம் தந்த சூழலில், அனுபவமிக்க ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து இளம் வீரர் இஷான்கிஷான் பேட்டிங்கில் மிரட்டியது ரசிகர்களுக்கு மிடில் ஆர்டரில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இஷான்கிஷன் ஜொலிப்பது தேர்வுக்குழுவினரின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது.