India vs Pakistan: இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேரடி கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று இந்த ஆண்டுடன் 10 ஆண்கள் ஆகின்றது. கடைசியாக இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் கடந்த 2012-2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரில் மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்கள்
இதன் பின்னர் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேரடி போட்டித் தொடர் நடத்தப்படவே இல்லை. இதற்கு முக்கிய காராணமாக இரு நாடுகளிலும் நிலவிய அரசியல் சூழல் காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் ஐசிசி தொடர்களிலும், ஆசிய கோப்பைத் தொடர்களிலும் மட்டும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இதனாலே இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
நேற்று முதல் துவங்கிய ஆசியக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி நேருக்கு நேர் மோதவுள்ளன. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமும் பாகிஸ்தான் போட்டிக்குப் பின்னர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் தற்போது வந்துள்ள வெதர் ரிப்போர்ட் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கவுள்ள பல்லேகேலே சர்வதேச மைதானம் அமைந்துள்ள இடத்தில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் போட்டி நடைபெற 90 சதவீதம் வாய்ப்பு இல்லை என்ற தகவலும் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர்
இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பைத் தொடரில் ஒருநாள் வடிவத்தில் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படாமல் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் ஆசிய கோப்பை வரலாற்றை கணக்கில் கொண்டு பார்த்தால் இந்தியாவின் கரங்கள் ஓங்கி இருப்பதாக கருதினாலும், தற்போது உள்ள பாகிஸ்தான் அணி மிகவும் சவால் அளிக்கும் அணியாக இருக்கும் என்பதால் இந்திய அணி அந்த சவால்களுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
இரு அணிகளுக்கு இடையில் அதிக ரன்கள் குவித்தவர்கள்
இரு அணிகளுக்கு இடையிலான ஆசிய போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் முதல் இடத்தில் உள்ளார். அவர் 5 போட்டிகளில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் விளாசி 428 ரன்கள் குவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா 7 போட்டிகளில் 367 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து அடுத்தடுத்த இடத்தில் பாகிஸ்தான் அணியின் யுனிஸ் கான் 238 ரன்களுடனும் விராட் கோலி 206 ரன்களுடனும் உள்ளனர்.
இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மூன்று முறை மோதுவதற்கான வாய்ப்பு உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.