ஐசிசி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நேற்று தொடங்கியது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்ற்றுள்ளன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை வரலாற்றில் இந்த தொடரில் நேபாளம் அணி முதல் முறையாக அறிமுகமாகியது. 


முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாளம் அணிகள் மோதின. இரண்டாவது போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி இலங்கையில் உள்ள பல்லேகேலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைய வில்லை. மாறக அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான் காத்துக்கொண்டு இருந்தது. 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வங்காள தேச அணி தத்தளித்தது. 


அதன் பின்னர் மெல்ல மெல்ல அந்த அணி ரன்கள் சேர்த்து வந்தது. 4வது விக்கெட்டுக்கு அந்த அணி 59 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் இந்த அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இன்னிங்ஸே இதுதான். அதன் பின்னர், இந்த அணி சீராக விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வர, வங்காள தேசத்தின் நம்பிக்கை நடசத்திரமாக மாறினார் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ. இவர் மட்டும் பொறுப்புடன் நிதானத்துடனும் ஆடி அணிக்கு நம்பிக்கை கொடுத்து வந்ததுடன் அரைசதத்தினைக் கடந்து சதத்தினை நெருங்கிக்கொண்டு இருந்தார். இறுதியில் 122 பந்தில் 7 பவுண்டரியுடன் 89 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை தீக்‌ஷனாவிடம் இழந்து வெளியேறினார். 


ஹூசைன் ஷாண்டோ தனது விக்கெட்டை இழந்த பின்னர் வங்காள தேசத்தின் டைல் எண்ட் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் 42.4 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது வங்காள தேசம். இந்த போட்டியில் வங்காள தேசத்தின் 11 வீரர்கள் பேட்டிங் செய்தும் ஒருவர் கூட ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. 


அதேபோல் இலங்கை அணி சார்பில் பத்திரனா 4 விக்கெட்டுகளையும் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளையும் அள்ளினர். இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 165 ரன்கள் இலக்காக உள்ளது.