IND vs PAK, Live Streaming: எந்த ஊடகத்தில் ஸ்போர்ட்ஸ் பக்கத்தைப் புரட்டினாலும் ஸ்க்ரால் செய்தாலும் வதவதவென தட்டுப்படும் செய்தியாக இருப்பது ஆசிய கோப்பைத் தொடரைப் பற்றிதான். அதுவும் இம்முறை ஒரு நாள் கிரிக்கெட் தொடராக நடத்தப்படுவதாலும், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பைத் தொடர் துவங்கவுள்ளதாலும், 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பைத் தொடருக்கான மவுசு மிகவும் அதிகமாகியுள்ளது. 


இந்நிலையில், ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நேற்று துவங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை ஊதித் தள்ளி அசால்டாக வென்றது. இதையடுத்து பாகிஸ்தான் அணி தான் இடம் பிடித்துள்ள, ’ஏ’ பிரிவில் உள்ள இந்தியாவை நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கும் போட்டி என்றால் அது இந்தியா பாகிஸ்தான் போட்டிதான். 


இந்த போட்டி துவங்க இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் நேரடியாக போட்டியை ஒளிபரப்பும் டிஸ்னி + ஹாட் ஸ்டாரின், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை தொடருக்கான குழு அளவிலான போட்டியை இந்தியாவிற்குள் இலவசமாக ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது. இந்த இலவச ஒளிபரப்பு என்பது முற்றிலும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் எனவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 


இந்த இலவச ஒளிபரப்பு என்பது இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பும் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இலவசமாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளது. 


போட்டியில் உள்ள சிக்கல்


போட்டி நடக்கும் மைதானம் அமைந்துள்ள இலங்கையின் பல்லேகேலே பகுதியில் போட்டி நடக்கும் தினமான செப்டம்பர் 2ஆம் தேதி 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இலங்கை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் போட்டி நடைபெற வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என இப்போதே இலங்கை ஊடகங்களில் பேச்சுகள் துவங்கிவிட்டன. போட்டி தொடங்க தாமதமானால் ரசிகர்களுக்காகவாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வானிலை வழி விட்டால்தான் நடத்தமுடியும் எனவும் கூறப்படுவதால், இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது 90 சதவீதம் வாய்ப்பு இல்லை என்பது தான் தற்போதைய நிலவரமாக உள்ளது.