விராட்கோலியின் அபார அரைசதத்தால் இந்திய அணி 181 ரன்களை எட்டிய நிலையில், இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து, களமிறங்கிய பக்கர் ஜமானும் 15 ரன்களில் சாஹல் சுழலில் வீழ்ந்தார். 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்காக நான்காவது வீரராக முகமது நவாஸ் களமிறங்கினார்.


களமிறங்கியது முதல் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார் நவாஸ். அவருக்கு மறுமுனையில் தொடக்க வீரர் ரிஸ்வானும் ஒத்துழைப்பு அளிக்க பாகிஸ்தான் ஸ்கோர் மெல்ல மெல்ல ஏறத் தொடங்கியது. குறிப்பாக, பாகிஸ்தானின் முகமது நவாஸ் சுழல், வேகம் என்று யார் வீசினாலும் வெளுத்து வாங்கினார்.





அவரைப் பிரிக்க இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப், சாஹல், பிஷ்னோய், ஹர்திக்கை பயன்படுத்தியும் பலனளிக்கவில்லை. 15 ஓவரில் பாகிஸ்தான் 135 ரன்கள் எடுத்த நிலையில் 16வது ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். அவரது பந்துவீச்சில் டேஞ்சர் பேட்ஸ்மேன் முகமது நவாஸ் அவுட்டானார். அவர் 20 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 ரன்கள் விளாசி வெளியேறினார்.


கடைசி 4 ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டது. முகமது ரிஸ்வான் களத்தில் இருந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி  இருந்தது. இந்த சூழலில், ஹர்திக் பாண்ட்யா வீசிய 17வது ஓவரில் முகமது ரிஸ்வான் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.




கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டதால் மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் கிடைத்த எளிதான கேட்ச்சை அர்ஷ்தீப்சிங் கோட்டைவிட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிஷ்னோய் 18வது ஓவரில் மூன்று ஒயிட் வீசினாலும் ஒரு பவுண்டரி கூட அளிக்காமல் கட்டுக்கோப்பாக வீசினார்.


புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பாகிஸ்தான் விளாசியது. இதனால், கடைசி 6 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. இதில் இந்தியா பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தியா கடைசி ஓவரில் யார்டுக்கு வெளியே 4 பீல்டர்கள் மட்டுமே வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.




அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் 1 ரன் எடுத்த நிலையில், இரண்டாவது பந்தில் ஆசிப் அலி பவுண்டரி விளாசினார். இதனால், வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மூன்றாவது பந்து டாட் பால் ஆகிய நிலையில், ஆசிப் அலி நான்காவது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகினார். இதனால், கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் வீரர் இப்திகார் அகமது 2 ரன்கள் விளாசியதால் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.   


இந்தியாவில் பிஷ்னோய் தவிர அர்ஷ்தீப், புவனேஷ், ஹர்திக், சாஹல் ரன்களை வாரி வழங்கினர்.