இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டிங் செய்யும் வீராங்கனையாகவும், விக்கெட் கீப்பராகவும் உலா வருபவர் ரிச்சா கோஷ். ரிச்சா கோஷிற்கு சமீபத்தில் 21 வயதாகியது.


டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில், மகளிர் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடராக நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நட்சத்திர வீராங்கனையான ரிச்சா கோஷிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


ரிச்சா கோஷ் ஏன் இல்லை?


முக்கிய வீராங்கனையாகவும், விக்கெட் கீப்பராகவும் திகழும் ரிச்சா கோஷ் 12ம் வகுப்பு தேர்வு எழுத இருப்பதால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு தேர்வு காரணமாக பிரபல கிரிக்கெட் வீராங்கனை இந்த தொடரில் பங்கேற்காமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. ரிச்சா கோஷின் இந்த காரணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.


பணம் கொழிக்கும் விளையாட்டில் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்தாலும் படிப்பு முக்கியம் என்பதை உணர்ந்து அவர் 12ம் வகுப்பு தேர்வுக்காக கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியிருப்பதற்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். இந்திய அணியின் முக்கிய வீராங்கனையான ரிச்சா கோஷ் தன்னுடைய 16வது வயதிலே இந்திய அணிக்காக அறிமுகமாகிவிட்டார்.


இவர் 1 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரிலும், 3 டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் ஆடியுள்ளார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பையும் ஆடியுள்ளார். 21 வயது பூர்த்தி அடைந்துள்ள ரிச்சா கோஷ் இதுவரை 2 டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2 அரைசதங்கள் அடங்கும். 23 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 அரைசதங்களுடன் 481 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 96 ரன்கள் எடுத்துள்ளார். 59 டி20 போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 879 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்துள்ளார். மகளிர் ஐ.பி.எல்,. தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக ஆடி வருகிறார்.


இந்திய அணி:


நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது. ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷபாலி வர்மா, ஹேமலதா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யஸ்திகா பாட்டியா, உமா சேத்ரி, சயாலி சத்கரே, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், தேஜல் ஹசப்னிஸ், சைமா, பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் களமிறங்குகின்றனர். இவர்களில் நான்கு பேர் புது முகங்கள் ஆவார்கள்.