நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரை வெற்றியை தொடர்ந்து தற்போது இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இந்திய டெஸ்ட் அணிக்கான முதல் போட்டியில் அஜிங்கே ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்தது.
இந்த தொடருக்கான இந்திய அணி பின்வருமாறு :
அஜிங்கே ரஹானே (C), புஜாரா (துணை கேப்டன் ), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், விருத்திமான் சஹா, கே.எஸ்.பரத், ஜடேஜா, ரவி அஸ்வின், அக்சர் பட்டேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசாத் கிருஷ்ணா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள கேப்டன் விராட் கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இணைந்து கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டி 20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை.
இந்தநிலையில், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே கழுத்தில் கத்தி உள்ளதாக ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், இங்கிலாந்து தொடருக்கு பின்னர் ரஹானே டெஸ்ட் அணியில் இடம் பிடித்ததே அதிசயம். அவருக்கு தற்போது கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முதலே ரஹானே எந்தவொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடவில்லை. கடந்த 8 போட்டிகளில் ஒருமுறை மட்டுமே அரைசதம் மட்டுமே கடந்துள்ளார். இதனால் இவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் இவர் சொதப்பினால் அடுத்து நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து ரஹானே நிச்சயம் நீக்கப்படுவார். இதை உணர்ந்து ரஹானே தனது திறமையை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்