இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மிகவும் முக்கியமான தொடர் சையத் முஷ்டாக் அலி தொடர். கடந்த 2009ம் ஆண்டு முதல் சையத்அலிமுஷ்தாக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான சையத்அலி முஷ்டாக் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது.




இதில், கர்நாடக அணியை தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. தமிழ்நாடு அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,


“ சையத்அலிமுஷ்தாக் தொடரில் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஷாரூக்கான், சாய்கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான-துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






முன்னதாக, டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் விஜய்சங்கர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார், முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அபினவ் மனோகர் மட்டும் பொறுப்புடன் ஆடி 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 46 ரன்களை குவித்தார். சுஜித் அதிரடியாக 7 பந்தில் 18 ரன்களை குவித்தார். இதனால், கர்நாடகா 151 ரன்களை 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து குவித்தது. தமிழ்நாடு அணி சார்பில் பந்துவீச்சாளர் சாய்கிஷோர் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


பின்னர், 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணியில் தொடக்க வீரர்கள் ஜெகதீசனும், ஹரிநிஷாந்தும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஹரிநிஷாந்த் 12 பந்தில் 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 23 ரன்களை எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். அடுத்து வந்த சாய் சுதர்சன் 9 ரன்னிலும், கேப்டன் விஜய்சங்கர் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஜெகதீசனும் 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சஞ்சய் யாதவும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டம் கர்நாடக பக்கம் சென்றது.




அப்போது, களமிறங்கிய ஷாரூக்கான் அதிரடியில் இறங்கினார். அவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அவர் 15 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களையும் விளாசி 33 ரன்களை அடித்தார். இதனால், தமிழ்நாடு அணி கடைசி பந்தில் 153 ரன்களை குவித்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சிறப்பாக ஆடிய ஷாரூக்கான், சாய்கிஷோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண