உலககோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியுடன் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஊரான ராஞ்சியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. உள்நாட்டு மைதானத்தில் ஆடுவதாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்றதாலும் இந்திய அணி இந்த போட்டியில் உற்சாகமாக ஆடும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுலும், ரோகித் சர்மாவும்தான் இந்திய அணியின் தூண்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் களத்தில் நின்றுவிட்டால் நிச்சயம் வானவேடிக்கை நடைபெறும் என்பது உறுதி. கடந்த போட்டியில் இவர்களது பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி 5 ஓவர்களில் 50 ரன்களை குவித்தது. குறிப்பாக, எப்போதுமே சிறப்பாக பந்துவீசும் ட்ரெண்ட் போல்ட் வீசிய ஒரே ஓவரிலே இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகளை விளாசினர். இதனால், இவர்கள் இருவரையும் விரைவில் ஆட்டமிழக்க நியூசிலாந்து வீரர்கள் போராடுவார்கள்.
அதேபோல, மூன்றாவது வரிசையில் களமிறங்கி வரும் சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட்கோலியின் இடத்தில் ஆடும் சூர்யகுமார் யாதவ் அவரைப்போலவே அதிரடியாக ரன்களை சேர்க்கிறார். கடந்த போட்டியில் சூர்யகுமாரின் அதிரடியால்தான் இந்தியா வெற்றி பெற்றது. அதேசமயத்தில் அவர் ஆட்டமிழக்கும் பந்துகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய அணியின் பேட்டிங்கிற்கு நியூசிலாந்து அணியின் பேட்டிங்கும் சற்றும் சளைத்தது அல்ல. உலககோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய மார்டின் கப்தில் – டேரில் மிட்செல் கூட்டணிதான் அந்த அணியின் ஆட்டத்தை தொடங்கும். டேரில் மிட்செல் கடந்த போட்டியில் டக் அவுட்டாகி இருந்தாலும் அவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன். அதேபோல, அனுபவம் வாய்ந்த மார்டின் கப்தில் இந்தியாவிற்கு எதிராக என்றாலே ரன் சேர்ப்பதிலும், பீல்டிங் செய்வதிலும் தனி ஆர்வத்துடன் காணப்படுகிறார். கடந்த போட்டியிலும் அவர் அதிரடியாக ஆடி 72 ரன்களை குவித்தார்.
இவர்கள் மட்டுமின்றி நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் இடத்தில் களமிறங்கி ஆடும் இளம் வீரர் மார்க் சாப்மன் கடந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். தனது முதல் போட்டியிலே அரைசதம் அடித்த அவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதனால், இந்த போட்டியிலும் அவர் இந்திய அணிக்கு குடைச்சல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி, நியூசிலாந்து அணி இரண்டு அணிகளுக்கும் இடையே பிரதான பிரச்சினையாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்டிங்கே. இந்திய அணியில் மிடில் ஆர்டர் சொதப்பியது கடந்த போட்டியில் மிகவும் தெளிவாக தெரிந்தது. சூர்யகுமார் யாதவ் வெளியேறிய பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ரன்களை சேர்க்க தடுமாறியது நன்றாக தெரிந்தது.
குறிப்பாக, ஸ்ரேயாஸ் அய்யர் இன்னும் தனது முழு திறனை காட்டவில்லை என்பதே உண்மை. அதேபோல, அணியில் இடம்கிடைக்கப் பெற்ற வெங்கடேஷ் அய்யர் தனது வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல, நியூசிலாந்து அணியில் தொடர்ந்து வாய்ப்புகளை பெறும் கிளென் பிலிப்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். விக்கெட் கீப்பர் டிம் செய்பர்டுக்கும் அதே நிலைதான்.
இரு அணிகளைப் பொறுத்தவரையிலும் பந்துவீச்சு மிகவும் பலமாக அமைந்துள்ளது. கடந்த போட்டி மூலம் புவனேஷ்குமார் பார்மிற்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. முகமது சிராஜ், தீபக் சாஹர் கட்டுக்கோப்பாக பந்துவீசினால் நியூசிலாந்திற்கு நெருக்கடி அதிகரிக்கும். சுழற்பந்துவீச்சு மூலம் இந்திய அணிக்கு அரணாக அஸ்வின் உள்ளார். அவருக்கு துணையாக அக்ஷர் படேல் உள்ளார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், போட்டியில் வென்று தொடரை சமன்படுத்த நியூசிலாந்தும் முனைப்புடன் ஆடுவார்கள் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்